எழுவோம் விழ விழ எழுவோம்!
“ஊர் கொடுத்தார் புலவருக்கு
உவந்தளித்தார் மிடி தீர
தேர் கொடுத்தார், திருக் கொடுத்தார்,
தெரு வெல்லாம் பவனி வர;
கார் நிறத்துக் கரி கொடுத்தார்;
காற்று விசைப் பரி கொடுத்தார்”
என்று வியந்து தொடங்குகிறது அவரது “கரும்புலி காவியம்”.
“காவியமாய் புதுப் புறம்பாடி” எம்
காலத்து வரலாற்றை நான் பொறிக்க வேண்டும்
சீவியத்தை மண் மீட்கத் தந்து – சென்ற
செங்களத்து மறவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்”
மாமனிதர் கவிஞர் நாவண்ணன்
இவனா என் பிள்ளை!
அம்புலியைக் காட்டி ஆவென்ன வைத்து
“அச்சாப் பிள்ளை “யென “ஆய்தந்த பிள்ளை”
கம்பால் அடித்து கண்டித்து பின்னர்
கண்ணீர் துடைத்து அணைத்திட்ட பிள்ளை;
“வம்புக்குப் போகாதே வலுச்சண்டை செய்யாதே
வாய்காட்டாதே” யென்று வளர்த்திட்ட பிள்ளை;
பெம்பகைவர் படைஅழிக்கும் வீரனாம் எனக்கேட்டு
வியக்கின்றேன் இன்று, இவனா என் பிள்ளை!
இருட்டுக்கு அஞ்சியவன் இரவானால் தனியாக
இருப்பதற்கு துணைகேட்ட பயங்கொள்ளிப் பிள்ளை;
விரட்டிக் கலைத்தாலும் விட்டகலாம் தாய்சேலை
வீம்போடு அவளோடு அலைகின்ற பிள்ளை;
பரட்டைத் தலைவான் படிப்புக்கு ஒளித்திடுவான்
பசியின்றி விளையாடித் திரிகின்ற பிள்ளை;
முரட்டுத் துவக்கோடு ‘சென்றி’யிலே நின்று
முழிக்கின்றான் இன்று இவனா என்பிள்ளை!
விதம்விதமாய் சமைத்து விருப்பு சுவையறிந்து
வேலைக்குக் கொடுத்தாலும் ” இது என்ன
இதம்இல்லை வேண்டாம் எனக்கு” என்றுகூறி
எடுத்தெறிந் தெழுகின்ற என்பிள்ளை.
பதம்பாகம் இல்லாது பசிக்கே உணவென்று
படையலாய் அவித்த எதையேனும்
நிதம் உண்கின்றானாம் நிம்மதியாம் அவனுக்கு
நினைக்கின்றேன் இன்று, இவனா என்பிள்ளை!
நாய் குரைக்க ஓடிவந்து நடுங்கிப் பதறியவன்
நாலுபேர் முன்நிற்க துணிவில்லாக் கோழை
தாய்க்கும் எனக்கும் நடுவினிலே துயிலுவதே
தனக்குச் சுகம் என்று எண்ணியவன் இரவில்
பாய் நனைப்பான், எழப்பயந்து படுப்பான் எழுப்பாது;
பட்டாசு வெடிக்கே பலகாதம் ஓடுபவன்
தாய்நாடு காக்கும் தானையிலே முன்னணியில்
திகழ்கின்றான் இன்று இவனா என்பிள்ளை?
இப்படியாய் மற்றவர்கள் இகழ்ந்துரைக்கும் குணங்களுடன்
இளப்பமாய் வாழ்ந்திட்ட என்னுடைய பிள்ளை
தப்படிகள் இல்லாது தக்கபடிதான் வளர்த்த
தத்துவத்தை வியக்கின்றேன் இவனா என்பிள்ளை!
எப்படித்தான் இவனுக்குள் இதுவெல்லாம் தோன்றியதோ?
இவர்சார்ந்த இடமே காரணமாம் என்றார்;
அப்படியாய் புதுமாற்றம் அடைந்த அவனுக்கு
அப்பன் நானன்றோ? அவனே என்பிள்ளை!
