போராளி மலைமகள் – எரிமலை 03/2008
காலத்தின் அழைப்பிற்குச் செவிசாய்த்து வீட்டிலிருந்து ஒரு குஞ்சைக் களத்துக்கு அனுப்பிவிட்டு காத்திருப்பவர் இதயங்களின் துடிப்பு மிக அதிகம் வீட்டு வாசலருகே வேகத்தைத் தணிக்கும் ஊர்திகள், வீதியில் திரும்பும் போராளிகளின் மிதிவண்டிகள் என எல்லாம் இவர்களின் துடிப்பை அதிகரிப்பவை. போர்க்களத்தின் செய்திகளுக்காக காத்திருப்பதிலேயே காலம் கழிந்து விடுகின்றன.
போரின் முகவரி பொழுதுக்கொன்றாக மாறினாலும் போரிடும் வீரர்களின் புத்துணர்வு மாறுவதில்லை முதலில் திருகோணமலை பின்னர் யாழ்ப்பாணம் இப்போது மன்னார் என்று களமெங்கும் பொறிபறக்கின்றது. வெற்றிச் செய்திகளும் வெற்றியை எமதாக்கியவர்களின் வீரச்சாவுச் செய்திகளும் வந்து கொண்டே இருக்கின்றன.
விழிகளில் நீர் வழிய மனம் பதற போருக்கு போ’ என்று தாம் நேற்று வழியனுப்பிவைத்த மகள் இன்று புகழுடலாக மூடப்பட்ட பேழையில் வருகிறாள்என்ற செய்தி அந்தத் தாய்க்கு தெரிவிக்கப்பட்டது. பிரிவின் வலி, தாயெழுப்பிய ஒலி ஊரை அவள் விட்டு முற்றத்துக்கு அழைத்தது.
மஞ்சர், சிவப்புத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பந்தலில் மகளின் வரவுக்காக காத்திருந்தனர். வந்தது புகழுடல்.பேழைதிறக்கப்பட முடியாதவாறு மூடப்பட்டிருந்தது.
பிள்ளையின் முகத்தை இனிப்பார்க்க முடியாது கடைசியாக அவளைப் பெற்றோர் சந்திப்பிலே கண்ட தோற்றமே மனதில் எழுந்தது எனினும் பேழையை திறக்கவே பலர் விரும்பினர்.
« பிள்ளையைச் சேதப்படுத்த வேண்டாம் அவள் அமைதியாக உறங்கட்டும் » அழுகைக்கிடையே தாய் சொன்னார். « கடைசியா ஒருக்காப் பாக்காம விடுறதோ, பெட்டிய நாங்கள் திறப்பம் » உறவினர்கள் அயலவர்கள் ஓலமிட்டனர்.
தங்கள் தோழியின் அமைதியைக் கெடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டபோராளிகளுக்கு விழுந்தன அடிகள். எங்கள் மக்களால் எங்களைத் தவிர யாரை அடிக்கமுடியும், உடல் நொந்தது உறுதி கொண்ட மனங்கள் அவர்களிடம் இருந்ததால் தாங்கிக் கொண்டார்கள்.
பிரிவு வேதனையில் துடிக்கின்ற மக்களின் உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தலைவர் அவர்கள் சொன்னது மனதில் பசுமையாக இருந்ததால் தாங்கிக் கொண்டார்கள்.
கட்டுக்கரையில பெரும் சண்டை நடந்த அதேவேளை பாலைக்குழியிலும் சண்டை நடந்தது. நான் உயிரோடு உள்ளவரை ஒரு சிங்களவரையும் என்னைக் கடந்துபோக விடமாட்டேன் என்ற உறுதியோடு ஒவ்வொருவரும் சண்டையிட்டார்கள். பாலைக்குழியில் தமது காப்பரணுக்கு வெளியே வந்து எதிரிகளைத் தேடித் தேடிச் சுட்டுக்கொண்டிருந்த போராளிகள் இருவரின் தலைகளை ஒரு எறிகணை கொண்டு போனது. கழுத்துக்குக் கீழ ஒரு கீறல்கூட இல்லை எனினும் உங்கள் பிள்ளையின் தலையில்லை என்று பெற்றவருக்கும் உற்றவருக்கும் நாங்கள் சொல்ல முடியாது எனவே அவர்கள் என்ன செய்த போதும் தாங்கிக் கொண்டார்கள்.
பேருந்தில் ஏறிய போராளிகள் ஜெயபுரத்திலிருந்து 2.ஆம் லெப். அபர்ணாவின் வீட்டைத் தேடிப்போனார்கள். அவர் 2007.10.27 அன்று திருக்கேதீச்சரத்தில் சிங்களப் படையினருடன் நடந்த நேரடி மோதலில் வீரச்சாவடைந்திருந்தார்.
பேழையைச் சூழ இருந்தவர்களின் மனநிலையை அறிவதற்காக சற்றுத் தள்ளியே இருந்தனர். நிமிர்ந்து இவர்களை கண்ட தாய் இரு கைகளையும் நீட்டினார்.
வாங்கோ பிள்ளையள் வாங்கோ வந்து பிள்ளையப் பாருங்கோ வீரச்சாவுக்கு வாற போராளிகளை அடிக்கக் கூடாது எண்டு பிள்ளை எனக்கு கடிதம் எழுதினவள். என்ர பிள்ளை போனதுக்கு வாறபிள்ளையளை நான் அடிச்சு என்ன செய்யிறது? வாங்கோ பிள்ளையள் என்றார் பெற்றாரின் குரல் உற்றவர்களைக் கட்டிப்போட்டது.
மேஜர். சந்திரா (அல்லி ஆறுமுகம், கிளிநொச்சி, 1999.10.14. அன்று அம்பகாமத்தில் நதிமூலம் (வோட்டர் செட்- 01 எதிர் நடவடிக்கை) அடிக்கடி முகம் கழுவி வாசமாய்ப் « சாகேக்கையும் வாசமாகச் சாகவேணும். வந்து தூக்கிறவைக்குக் கரைச்சல் குடுக்கக் கூடாது » என்பார். சாவின் பின்னரும் இன்னொருவரை நோகவைக்கக்கூடாது என்று நினைப்பவர்கள் போராளிகள்)
பின்பெட்டியில் மன்றநிலாவையும் எழிலமுதுவையும் சுமந்த கேணல். யாழினியின் படைய ஊர்தி திருக்கேதீச்சரத்தைநோக்கிப் பயணித்தது அவர்கள் இருவரும் போருக்குப் புதியவர்கள் காலத்தின் குரலை உணர்ந்த பெற்றோர்களால் களம் நோக்கி வழியனுப்பப்பட்டவர்கள். திருக்கேதீச்சரத்தில் இறங்கியவர்களை அந்தப்பகுதி நிலைகொண்டிருந்த அணியினரின் கட்டளை அதிகாரி பொறுப்பேற்று காப்பரண் ஒன்றில் விட்டார்.
வந்த வழிமுழுவதும் யாழினியோடு உரையாடி அவரின் சண்டை சார்ந்த பட்டறிவின் சில துளிகளை உள் வாங்கிக் கொண்டு வந்து இருவரும். தமது காப்பரணின் முன்புறத்தை அவதானித்தனர் முன்னேஇந்த நீர்நிலை ஒன்று எதிரிக்கு வாய்ப்பையும் எங்களுக்கு வாய்ப்பற்ற நிலையையும் தரக்கூடும் என்று உணர்ந்தனர். உடனடியாக அன்றிரவு பின்னர் தொடர்ந்தும் தமது காவலையும் கண்காணிப்பையும் நீர்நிலைக்கு முற்புறம் ஒரு மறைவான இடத்துக்கு மாற்றினார்கள்.
மூன்று நேர உணவும் நேர காலத்துக்கு வந்து சேர்ந்தது சேராது வருகின்றதா வருமா என இடையிடையில் கேட்பதற்கும் போராளிகள் ஒரு மறைபொருட் சொல்லைப் பயன்படுத்தினார்கள். அதை எதிரிகள் இந்நேரம் அடையாளம் கண்டிருப்பார்கள் என ஊகித்த இவர்கள் தமக்குள் ஒரு மறைபொருட் சொல்லை உருவாக்கி தமது மேலாளருக்குத் தெரியப்படுத்தி விட்டுப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
சில நாட்களின் பின் போர் முன்னரங்கை பார்வையிட்டவாறு யாழினி வந்தார். இவர்களை கண்டார். ஏன்எதை எதற்காகச் செய்தோம் என்ற இவர்களின் விளக்கங்களைக் கேட்டார் ஸ்ரீ தனக்குள்.
புதிய தலைமுறை போரைப் பொறுப்பெடுத்துவிட்டது.
வீட்டிலே சமையல் சாப்பாட்டைக் காக்க வைக்காதே கெதியாச் சாப்பிடு நாளைக்கு சாப்பாடு உள்லனக் காக்க வைக்கும் என்று அடிக்கடி அம்மா சொல்வது அன்று ஏனோ திமரென நினைவில் வந்து விட்டது கூடவே சிரிப்பும் வந்தது.
பரப்பாங்கண்டலிலே எமது போர் முன்னரங்கில் சங்கீர்த்தனாவின் ஆளுகைக்குட்பட்ட காப்பரண்களின் சுற்றுப்புறங்களின் (சற்று அயற்புறம்) தேடுதல் செய்து முடியவே மதியம் 1.00 மணி ஆகும் அதன் பின்னர்தான் காலைச் சாப்பாடு எடுத்துவரப் போகலாம் அவரது ஆளுகைக்குட்பட்ட காப்பரண்களின் பின்புறம் ஒரு நீர்நிலை இருப்பதால் அவர்களின் போக்குவரவுப் பாதையாகப் காப்பரண்களையே பயன்படுத்த வேண்டியிருப்பதால் எப்போதுமே காலையுணவையும் மதிய உணவையும் சேர்த்து ஒன்றாக எடுக்க நேரிடும்.
ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மூன்று பேர் குளிக்கப்போவார்கள் அன்று ஒரு அணி குளிக்கவேண்டிய நாள் எனில் தேடுதலை 1.00 மணியளவில் முடித்து குளித்து விட்டு மதிய உணவை எடுத்து வழியிலுள்ள காப்பரண்களுக்கு கொடுத்தபடி தொங்கலுக்கு வந்து சேர சிலவேளை 4.00 மணியாகிவிடும் காற்றைக் குடித்துக் கொண்டிருப்போர்கள் நேர காலத்துக்கே சண்டையெனில் அன்று முழுதும் சாப்பாடிராது சாப்பாடு நினைவும் வராது அம்மாவுக்கு இது விளங்கவே விளங்காது.
களம் பல கண்ட காப்பரண்கள் அவை அடம்பம், மாந்தை முதன்மைச்சாலையின் இரு புறங்களிலும் அமைந்திருந்து 2 ஆம் லெப். இசையழகியின் காவல் நிலையையும் கலைவதனாவின் காவல் நிலையையும் விடிந்ததுபாதி விடியாதது பாதியாக சிங்களப் படையினர் தாக்குவது வழமை. டாங்கிகள். உந்துகணை செலுத்திகள் 40 மில்லி மீற்றர் எறிகணைசெலுத்திகள் பீ.கே.எல்.எம்.ஜி.கள் என்று எல்லாவற்றாலும் முழுங்கித் தள்ளிவிட்டு முன்னகரும் சிங்களப்படைகளைச் சுடு சுடு என்று சுட்டு இவர்களின் ரவைகள் முடிந்து விடும். நாளாந்தமும் இவர்களுக்கான ரவைகளையும் குண்டுகளையும் காவும் குழுவினர் காவிக்கொடுப்பார்கள்.
அன்றும் சிங்களப் படையினர் வழமைபோல அதிகாலையில் டாங்கிகளால் கலைவதனாவின் காவல் நிலையை மொங்கு மொங்கென்று மொங்கினார்கள். மண்கட்டிகள் மரக்கொப்புகள் எல்லாம் மேலெழுவதும் கீழே விழுவதுமாக அடி தூள் பறந்தது அடி ஓய்ந்ததும் கலைவதனாவும் ஈகைமதியும் அமுதமதியும் வலைக்குள். பதுங்கிக்கிடந்த அகலெலிகள் வெளியே தலைநீட்டுவதைப் போல நீட்டி நிலைமையை பார்த்து விட்டு தமது வழமையான நடவடிக்கைகளைச் செய்தனர்.
அன்று மாலை அயலிலே கொப்புகள் ஒதுக்கப்படும் ஓசையும் குரலொலிகளும் கேட்க இவர்கள் விழிப்பானவர்கள் உடனடியாக கொம்பனி நடத்துனர் சொரூபிக்குத் தெரியப்படுத்தினார்கள். அவர் உடனடியாக பிளாட்டுன் நடத்துனர் தரணியைப்போகுமாறு பணித்தார். தரணி தன்னோடு கபிலாவைக் கூட்டிப்போனார்.
கண்ணிவெடி வேலை செய்யும் போராளிகள் நால்வரைக் கூட்டிக் கொண்டுசொரூபியும் புறப்பட்டார். கூட பீ.கே.எல்.எம்.ஜி.நந்தாயினி தன் உதவியாளருடன் இரு சுடுகலன்களை சுமந்து பேனார்
காவல் நிலையில் நின்றவர்களில் அமுதமதி சம்பவ நேரம் ஏதோ வேலையாகக் கட்டளைப்பணியகத்துக்குப் போயிருந்தார். தனித்திருந்த இவ்விருவருக்கும் பெரும் பலமாக சொரூபியும் தரணியும் வந்து விட்டனர் கண்ணி விதைக்கும் போராளிகளைக் கூட்டிக்கொண்டு காவல் நிலையின் முன்புறமாகப் போன சொரூபியைச் சிங்களப்படையினர் கண்டு பீ.கே.எல்.எம்.ஜி.யால் சூடுகளைத் தொடங்க எல்லோரும் மின்னல் வேகத்தில் காவல் நிலைக்குள் இறங்கி பதில் தாக்குதலைத் தொடங்கினர்.
காவல் நிலையில் நின்ற பதினொரு போராளிகளுக்கும் முன்னேறி வந்த பல பத்து சிங்களப் படையினருக்கு மிடையிலான கடும் சண்டை பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது போராளிகளில் கண்ணிவெடிப் பணி செய்ய வந்த நால்வரிடமும் சுடுகலன்கள் இருக்கவில்லை இருந்த சுடுகலன்களில் ஒன்று இயங்க மறுத்து விட்டது விடுதலைப் புலிகளின் ஆறு சுடுகலன்களினதும் செறிவான சூட்டில் சிறிலங்காவின் பெரும்பான்மை இனத்தின் பெரும்பாலான சிங்களத் தரைப்படையினார் நடையைக் கட்டினார்.
‘உலகளாவிய ரீதியில் மிகக் கூடியளவு பயிற்சிபெற்ற படைகள் கூடத் துணிவின் முன்னால் மண்டியிட்டுத்தான் இருக்கின்றன’ துரோகி பஸ்தியாம்பிள்ளையைச் சுட்டபோது லெப் செல்லக்கிளிக்கு இயந்திரத்துப்பாக்கியில் பயிற்சி இல்லை அவர் துப்பாக்கி வைத்திருந்த விதத்தைப் பார்த்து ஊகித்துத்தான் இவர் சுட்டார். அந்த வெற்றி துணிவால் கிடைத்தது.


