யோகரத்தினம் யோகி (வெளிச்சம் முதலாண்டு நிறைவுச் சிறப்பிதழ் புரட்டாதி – ஐப்பசி 1992)
எந்தையும் தாயும் பிறந்து வளர்ந்ததும்
அவர்தந்தையும் தாயும் வாழ்ந்து மகிழ்ந்ததும்
என்தாயக பூமியின் மடியினில் தானே
எனதாயினும் மூத்தவள் தாயகம் தானே
தாயின் வயிற்றில் கருவாய் இருந்தேன்
தாயவள் தந்திடும் உணவினில் வளர்ந்தேன்.
தாயின் வயிற்றில் கருவாய் மலர
தொட்டிலாய் இருந்தவள் தாயகம் தானே
தாயவள் தந்திடும் உணவினில் வளர்ந்திட
கஞ்சியை தந்தவள் என்தாயகம் தானே
தவழ்ந்திட இங்கே தாயகம் இருந்ததால்
தாயவள் மடியில் வாழ்வது மலர்ந்தது
தாயகம் இருந்ததால் தாய்மொழி வாழ்ந்தது
தாய்மொழி தமிழ் மொழி கருவினில் கேட்டது
தாய்ப் பாலை குடித்து அம்மா என்றதும்
யாழ் பாலையில் தவண்டு தத்தி நடந்ததும்
அம்மா, அப்பா, ஆடு என்றதும்
ஆடு, மாடு, நாடதைப் பார்த்ததும்
நேற்றும் நடந்தது;
தாயக பூமியில் இன்றும் நடக்குது.
தாயவள் அன்பது அள்ளிடக் குறையுமா?
தாயவள் அன்பதை அளவிட முடியுமா?
தாயக செல்வம் அள்ளித் தான் குறையுமா?
தாயக வளம் தனைச் சொல்லிட முடியுமா?
நாங்கள் வாழத் தாயவள் உழைப்பாள்
நாங்கள் உழைத்தால் தாயவள் சிரிப்பாள்
நாங்கள் வாழத் தாயகம் வளம் தரும்
எங்கள் உழைப்பால் தாயகம் வளம் பெறும்
தாயினைப் பிள்ளைகள் பிரிவது உண்டு
தாயவள் பிள்ளையை மறப்பதும் உண்டோ?
தாயைப் பிரிந்து சென்றிடும் பிள்ளைகள்
அன்பைத் தேடி தாயிடம் வருவர்
தாயவள் பிள்ளையை வெறுப்பதும் இல்லை
அன்பினால் அணைத்திட மறுப்பதும் இல்லை
தாயகம் தன்னை பிரிந்தவர் எத்தனை
தாயகம் அவர்தமை மறப்பதும் இல்லை
தாயகம் பிரிந்து சென்றிடும் தமிழர்கள்
எல்லாம் இழந்தபின் தாயகம் வருவர்
தாயகம் அவர்தமை வெறுப்பதும் இல்லை
தாயகம் அவர்தமை மறுப்பதும் இல்லை
குளிரினில் நடுங்கும் பனிமலை இல்லை
தீயினில் கருக்கும் எரிமலை இல்லை
ஊரெங்கும் பழமரச் சோலைகள் உண்டு
உலகினில் இதுபோல் பழச்சுவை இல்லை
கரையெலாம் மீன் இனம் வந்தெம்மைத் தேடும்
வயலெல்லாம் நெல்லினை அள்ளிக் கை நோகும்
அளவிலா செல்வத்தில் திளைத்திடும் தாயகம்
தாயைப் போல என்றுமே அணைத்திடும் தாயகம்
இத்தாயக பூமியில் குண்டுகள் வெடித்தன
தாயக மேனியைக் கீறிக் கிழித்தன
தாயகம் என்றுமே தளர்ந்ததா! இல்லையே!
தாயகம் துளிர்விட மறந்ததா இல்லையே!
ஆயிரம் குண்டுகள் விழுந்து வெடித்தன
தாயவர் உடல்கள் சிதறித் துடித்தன
குழந்தைகள் குருதியில் மூழ்கினர், செத்தனர்
ஆயினும் தாயவள் கருவினைச் சுமந்தாள்
தமிழீழ விடுதலைப் பயிர்தனை வளர்த்தாள்
தாயகம் வாழ்ந்தால் தமிழினம் வாழும்
தமிழினம் வாழ்ந்தால் தமிழது வாழும்
தாயகம் விடுதலை பெற்றிட வேண்டும்
தாயவள் துயரம் மறைந்திடல் வேண்டும்
விடுதலைப் பாதை இருளிலா கிடக்குது
தற்கொடைத் தீபங்கள் எங்குமே எரியுது
தீபத்தை ஏந்துங்கள் வழிதனைக் காணுங்கள்
தாயகம் விடுதலை பெற்றிட வாருங்கள்
நாளையே விடுதலை கிடைத்திடும் பாருங்கள்.




