கதை, கண்ணீர், கவிதை பாதுகை அல்ல;

மலையகம்
கதை, கண்ணீர், கவிதை பாதுகை அல்ல;
-கவிஞர் நாவண்ணன்-

பத்தினித் தமிழராம்
பதத்தினைத் தந்ததாலே
பழமையை தலையினில் வைத்து- கணவன்
உத்தமன் அல்லாத
உலுத்தனாய் இருப்பினும்
உத்தமி துயர் கொளல் போல.

கண்ணகி வழியிலே
கண்மூடி வாழ்கின்ற
கருத்தினை இங்கு யான் சொல்வேன். புதுமை
பெண்ணவள் போலவே
புயலென மாறியே
புரிகுவீர் எதிர் வழக்காடி.

பாதுகை ஆகியே
பழ வழக்காடிடும்
பாவையின் பாதையில் வேண்டாம்- இவன்
தீதுகை ஓங்கிடின்
தீமையை சாடியே
தீரமாய் வாழ்ந்திடல் வேண்டும்.

காதலர் மனத்துடன்
கையது கோத்திடல்
கடமையே ஆயினும் வாழ்வில்- கொண்ட
காதலன் தூய்மையில்
காதன் ஆகிடில் காதலி
தாங்கிடலாமோ.

இரு மண உறவுடன்
இயற்றியே இல்லறம்
இனிமுடி யாதெனக் கண்டால்- உடன்
திருமண முறிவுதான்
திருப்தியாம் என்கிடில்
திடமுடன் முடிவு கொள் வாழு.

மலையகம் எம்மவர்
மண்ணது ஆகுமோ
மற்றுமோர் தாய் மகவல்லர்-எம்
நிலையகம் இங்கு யாம்
நிற்பது எம்கடன்
நிகழ்ததுவோர் உரிமைகள் கோரி.

மோதலே ஆகினும்
மோதியே சாகினும்
முழங்குக முரசுவிண் அதிர- பிரிந்து
போதலே முடிவெனில்
பொங்கியே அணிதிரள்
போலிகள் பொடி பொடியாக.

மலையக மங்கையர்
மாலை இழப்பினும்
மனமது சோர்வது இல்லை- மலையில்
இலைகொய்து வாழ்வினை
இன்னும் தொடருவாள்
இது ஒரு பாடமாய் கொண்டு.

ஓடுதல் உயிர்க் கஞ்சி
ஓதங்குதல் நிழல் கண்டு
உன் பழம் வாழ்வுக்கு மாசு- நின்று
சாடுதல் கொள்கையில்
சாகுதல் முன்வழி
சத்தியம் காத்திங்கு வாழு.

தரித்திரம் வாழ்க்கையில்
தரித்திரா நித்தியம்
தனித்துவம் காணுவம் வாழ்வில்- புதிய
சரித்திரம் காணுவம்
சமத்துவம் காணுவம்
சங்கமம் ஆகுவம் மலையில்.

பொறுத்தவர் ஆளுவர்
பொறுத்திடு நாள் வரும்
பொன்மயம் ஆகிடும் வாழ்வு- எம்மை
வெறுத்தவர் உணருவர்
வேதனை காணுவர்
விரைவினில் வரும் அந்த நாளே.

Retour en haut