ஒருநிலாக்காலஇரவில்காற்றெழுதிப்போனகவிதை
புதுவை இரத்தினதுரை (வெளிச்சம். 2001 )
நிலவு என்னவோ அழகுதான்.
அதுவரும் வழியெங்கும்
அழகாய் புதிதுடுக்கிறது உலகு.
நெருஞ்சியேறிய நெஞ்சிற் கூட
வலிதெரிவதில்லை.
இருளும் நிலவும் பிணையும் போது
பூமி கல்யாணச் சிலிர்ப்பில் பொலிகிறது.
எப்போதுமே நிலாக்காலம் இப்படித்தான்
வாரிச்சுருட்டி தனக்குள்ளே வைத்துக்கொள்கிறது.
மன்மதனாட்டம் ஒரு மாயப்பூவெறிந்து
வசப்படுத்தி விடுகிறது.
மெல்லிய மெட்டொலி சப்திக்கும்
பள்ளியறையின் பரவசம் நிறைக்கிறது.
வனத்தின் மீதும்
வயலின் மீதும்
குளத்தின் மீதும்
உருகித்தவழும் வாய்க்கால் மீதும்
யாகுமற்ற சாமத்தில் அடிவளவுத் தென்னை மீதும்
ஓவென்று காற்றறையும் ஆட்காட்டி வெளி மீதும்
கடல்மீதும்
சொக்குப்பொடி தூவி விடுகிறது நிலவு,
என்னையும் உன்னுளே வைத்துக்கொள் என்பதாய்
படுத்துமொரு பாடு.
பகலில் கானலடிக்கும் பற்றைவெளி கூட
என்னமாய் நிலவு வந்ததும் ஒளிர்கிறது.
நிலவு என்னவோ அழகுதான்
மண்ணின் மனநிலைக்கு ஏற்றதாய்.
நிலவுக்குச் சகடயோக ஜாதகம்
வாழ்வும் தாழ்வுமான பலன்.
கர்ணபிரபு போல அள்ளியும் சொரியும்
பாவம் ஒரு பரதேசி போலவும்
இரந்தபடியும் உலவும்.
30-10-1995 அன்று
ஒற்றையிரவில் ஊர்பிரிந்த மறுநாளும்
நிலவிருந்தது.
நிலவு தின்னும் பசியிற்தான் எவருமில்லை
செம்மணி கடந்து
நாவற்குழி வந்நாறிய இரவில்
ஊமைக்காய வலியுடன்
சோகத்தலையில் தானுமழுதபடியிருந்தது.
அன்று பரதேசி நிலவின் யாசிப்புலா.
தேஜஸ் முழுதும் கருகி
எட்டத்தில் புகாராய் தெரியும் நிழற்காட்சியாய்
நிலவு வரைந்தது நீர் வண்ண ஓவியம்.
மெல்லிய பட்டுத்திரையுள்ளே
குத்து விளக்கொளியில் குடியிருக்கும் வெளிச்சம்
அன்று செம்மணியிலிருந்து
நாவற்குழி வரை தயிராடையாய் படர்ந்திருந்தது.
வயல்களில் உள்ளிறங்கி மீளவும்,
சேற்றில் புதைர்த காலெடுத்து வரம்பேறவும்,
தோளின் சுமை வீழும் போதில்,
கைக்கணக்கில் தேடியெடுக்கவும்.
வறுமையுற்றிருந்த நிலவு வாய்ப்பானது:
ஊரின் வேரிழுத்த வெப்பிசாரத்தில்
மூச்சுத்திணறிய முதிர்கொடிகளை
நாவற்குழிப் பாலத்தருகே கையால் வறுகி
புதைத்தேக வசதியாய்
அன்றும் நிலவிருந்தது
மூக்கொழுகும் நீரும் பெருமூச்சும் கொண்
அழுதபடி.
இப்போ வன்னிக்கு மேலும் நிலவின் யாத்திரை.*
அவசரமற்ற பயணியாய்
காலக்கெடுவற்ற வேலைக்காரனாய்
நகரும் நிலவு.
அகதிக்குடியிருப்புகளென்றாயினும் வஞ்சனையில்லை
வாரியிறைக்கிறது அமிர்தம்.
பௌர்ணமி நாளில் பாலாபிஷேகம்.
எல்லாச்சுகமும் அடிவற்றிப்போக
உள்ளதே நிலவொன்றாகிய வாழவு.
வற்றாப்பளை அம்மன் படித்துறையிறங்கி
நந்திக்கடல் மீதும்,
இரணைமடுக்குளத்தின் கரைமருங்குள காட்டின் மீதும்.
வனத்துளே பூத்துள மரங்கள் மீதும்,
ஒற்றை வகிடெடுத்தோடும் செம்புழுதித் தெருமீதும்,
ஏகாந்தமான எல்லாவற்றின் மீதும்
மனம் கிளர்ந்தெழும் ஸ்வரங்களாய்
வழிகிறது நிலவு.
களத்தில் வீழும் பிள்ளைகளைத் தூக்கி
ஒற்றித்துடைத்து
ஒரு முத்தமிட்டு
துயிலுமில்லம் விதைத்து மீளும் வழியெல்லாம்
துணைக்கு வருகிறது தானுமழுதபடி.
விதைத்த குழி மீதும் விழுந்தழுகிறது.
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் மீதும்,
மண்திட்டிகளான புதுக்குழிகள் மீதும்
நிலவு விழுந்தழும்போது
உள்ளே கிடக்கும் உடலே தெரிவதாய்
பார்த்தழத்துடிக்கிறது மனசு.
மெளனாஞ்சலி செய்யும் நிலவும்
ஏதோ சொல்லிச் சொல்லிப்போகும் மேலே
முல்லலத்தீவு
தவம் கலையாக் கடலோரம்
சீன்னக் காவிரிப்பூம் பட்டினம்
பொன்னின் இழைவைத்திழைத்ததாய்
என்னே அழகிது.
ஓரிரவு சாமம் கழிந்த பொழுதொன்றில்
சங்காரம் நடந்தது
கொழுத்தி எரித்தபடி எம்மடியேறிப் புகுந்தனர் யமர்.
கரையெங்கும் படுத்திருந்த படகுகளும்,
வலைகளும்.
அம்பாப்பாட்டும்,
உடடல் தழுவும் உப்புக்காற்றின் சுகலீலையில்
மேனிசிலிர்க்கும் சோபிதமும்
இழந்து போன இரவன்றும்
மேக முந்தானையில் முகம் மறைத்து
நிலவிருந்தது.
வழியெங்கும் விழி நீர் விழுத்தி
வெளியேறினோம்,
நிலவு கூட வந்ததாயினும் ஏதும் பேசவில்லை.
வெறுங்கையராய் வெளியேறி
ஆண்டுகள் கடந்த ஒருநாள்
ஓயாதலையொன்று ஊர்புகுந்த மறுநாள்.
கைப்பற்றிய பீரங்கிகளைத் தடவியபடி
மீண்டும் புகுந்தோம் எங்கள் அழகிய கடலோரம்.
பொட்டுத் துணியுமற்ற மேனியாய் கிடந்தது
எம் உயிர் வீதைத்த ஊர்கள்.
வல்லுறவுக்குள்ளான வயோதிப மாதாய்
கிடந்தது சின்னக் காவிரிப்பூம் பட்டினம்
அழுகையும், ஆனந்தக் கண்ணீருமாக
கையெடுத்துத் தொழுதோம்
வற்றாப்பளை ஆச்சியை.
பரவசம் தரித்த முகத்தினராய்
நந்திக் கடலோரம் நின்று பாடினோம்.
வானில் நிலவிருந்தது அன்றும்.
அழுதபடி அல்ல…
“வென்றீரென் விழிமுன்னே’ என்றோர் விடுதலைப் பாடலை
பாடியது – நிலவு.
அன்றுதான் நிலவை அத்தனை அழகாய்ப்பார்த்தோம்
எத்தனை எழிலதற்கு.
இப்படித்தான் கிளிநொச்சியும்
புகுந்தழித்துப் பொல்லா அரக்கர் புக
விழுந்தடித்து வெளியேறினோம்,
வீட்டுப் படலை கட்டி
முற்றத்து மண்ணை முத்தமிட்டு
என்றும் பிரிந்திராக் கூடுவிட்டேகினோம்.
கிளிநொச்சி கண்ணெதிரே கட்டிய கோபுரம்.
குடமுழுக்காட்டிய நகரம்.
உழுவோர் வியர்வைமுத்து விளைச்சலில்
கோர்த்துக் கட்டிய மாலை
அறுந்து புழுதியில் சிதறின மாணிக்கப் பால்கள்
கால்பட்ட திகைப்பூண்டாய்
குமரிநகரம் கொலுவிழந்து போக
போகுமிடம் தெரியாது புறப்பட்ட அந்நாளும்
கூட நடந்தது நிலவு.
பாதையெங்கும் வெளிச்சம் பரப்பி
வந்தது கீற்று நிலா.
இரண்டு மாரியின் பின்
மீண்டும் கிளிநொச்சியின் கபாடம் திறந்து
குடை, கொடி ஆலவட்ட மேந்தி
குடிபுகுந்தோம் ஊரில்.
இடியுண்ட கற்குவியலுக்குள்ளே
அத்திவாரங்கள் மட்டும் அழுதபடி.
மீட்ட மையத்தில் கொடியேற்றிய போது
நெஞ்சினுள்ளே நீரோற்பலம் பூத்தது.
அவிழ்த்துக் கலைத்த மாடுகள்
எம்மை அடையாளம் கண்டன.
அதுவொன்றே போதுமென
கண்டிவீதியை கையாற தழுவினோம்.
முற்றத்திருந்த மாதுளை
சற்று உப்பிப் பெருத்திருந்தது.
கிணறிறைத்த போது
எலும்பாகிய இரண்டு தமிழர் வெளிவந்தனர்.
கொஞ்ச நாள் தூக்கம்தழுவாத நயனத்தினராய்
முற்றத்தில் கூத்தும் பாட்டும்.
எத்தனை காலத்தின் பின்னே எம் வளவு
எத்தனை காலத்தின் பின்னே எம் வீடு
திரும்பும் திசையெங்கும் திருவிழா என
விருந்தும் விளையாட்டும்.
இரவுணவை எம்மோ ண்டது நிலவு.
இரணைமடுக் குளத்திலிறங்கி
நிலவின் பிம்பம் நீராடியது.
வயலின் மீதும்
வாய்க்கால் வரம்பின் மீதும்
நடப்பில் நடந்தது நிலவு.
ஆனையிறவு.
பரணிக்குரிய பாட்டுடைப்பொருளாய்
மூவாயிரத்துக்குமதிகமான பிள்ளைகளின் குருதியில்
மீட்கப்பட்ட வெளியது
உப்பேரி உள்ளாலும்
கண்ணிவெடி வயலாலும்
சுற்றிவளைத்து பிள்ளைகள் புகுந்து
காத்திருந்த நாட்தொட்டுக் காரிருட்டு
வென்றன்று மட்டும் வெளிச்சம்.
துலாக்கால் போட்ட சோதனைச் சாவடி
நிலாக்காலம் ஒன்றில் தான்
மீண்டும் நிலமாந்தர் வசமாச்சு
‘ஆனையிறவின் மேனிதடவி
போனது போனது பூங்காற்று’
பாடலை இன்றும்தான் பாடூகிறது நிலவு
நாங்கள் அழுத போதும் நிலவிருந்தது.
சந்தோஷம் கட்டிச் சதிரிடும் போதும் நிலவிருக்கிறது.
உலகெங்கும் நிலவு உளது
அழகென்னவோ இங்கு தான்.




