இருந்ததும் இல்லையென்றானதும்
புதுவை இரத்கனதுரை!
நேற்றெம் ஊரிருந்த காற்றில்
இதமான குளிரும்
நேர்த்தியான சுகமுமிருந்தது.
சாணி மெழுகிய தலைவாசலில்
சந்தனக்காப்பெனும் புனிதமிருந்தது.
வாசலிறங்கக் கோலமிருந்தது.
வயலில் நம்பிக்கை விளைந்தது..
வெளியே அறியப்படாத எத்தனையோ
உள்ளே வெளிச்சம் நல்கின.
அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும்
குறுக்காகக் கட்டிய மாராப்பிலும்
நிறையும் மனமிருந்தது..
மின்சாரம் மினுங்காத ஒழுங்கைகளில்
இருளெனும் எழிலிருந்தது.
அள்ளிய ஒருமிடறு நீரிறக்க
சுவாசம் சீராகும் சுகம் தெரிந்தது.
ஆலமரம் விசிறிய காற்றின் தாலாட்டில்
தேவநிலை சித்தித்தது.
ஊர்நிறைத்த கோயில்மணி நாதமும்,
கூத்துப்பாட்டும்,
நாதஸ்வர மங்கலமும்
தூக்கித் தட்டாமாலை சுற்றிவிட்டு
எங்கே துரத்திப்பிடியென்பதாய்ப் போமின.
சாவுக்கும் சடங்குக்கும் ஊனுருகியொழுக
பக்கத்திற் சுற்றமிருந்தது..
சனியானாற் பிடித்திழுத்து எண்ணைமுழுக்காட்ட
ஆத்தைமார் இருந்தனர்.
புதுவருடத்தன்று புளியமரக்கிளையேறி
அன்னவூஞ்சல் கட்டி ஆட்ட
அம்மான்மார் இருந்தனர்.
சின்னத் திரளிப்பொடியும்
வெள்ளிமுரலும்,
கூனிறாலும் போட்டுக் குழம்புவைக்க
குஞ்சாச்சிமார் இருந்தனர்.
நிழல் விழுத்தும் முற்றத்துப் பூவரசின் கீழே
பல்லாங்குழியாட அம்மான்மகள்மார் இருந்தனர்.
தில்லையம்பலப் பிள்ளையார்கோயிலுக்குப் போய்வர
திருக்கல் வண்டில்கள் இருந்தன.
என்ன இல்லையென்பதாய்
எல்லாமுமிருந்தன.
தையெனிற் பொங்கல்
சித்திரையிற் கஞ்சி
ஆடியிற் கூழென
வாய்க்குக்கூட வரையறையிருந்தது.
அப்பனுக்கு மூத்தவன்
ஆத்தாளுக்கு இளையவனென
சாவுக்குப் பின்னுமொரு சங்கையிருந்தது.
ஆகக்கூடிய தொலைவுப்பயணமெனக் கதிர்காமத்துக்கு
அதுவும் கால்நடையாகப் போகும்
வடிவிலங்கிய வாழ்வொன்றிருந்தது காலடியில்.
மாதமொரு கூத்திருந்தது கோயில் வெட்டையில்
அதுவே போதுமெனத் தூங்கியெழுந்தன ஊர்கள்.
சூடடித்துக் குவித்த நெல்லும்
கிழித்துலர்த்திய ஓடியலும்
நிறைத்த நெஞ்சில் நித்திரையிருந்தது
தழுவிப்போனது காற்று
உருகி உள்ளேறியது உறவு.
கமல்ஹாசனும் சிம்ரனும் சொல்லித்தர முன்னரும்
இலந்தைமரக் காட்டுவெளியிடையும்,
புல்லாந்தியும் நாயுருவியும் சணைத்த
ஒற்றையடிப் பாதையிலும்,
வயல் வரம்பிலும்,
வாய்க்காற் கரையிலும்,
தோட்டவெளி ஆடுகாற் பூவரசின் கீழும்
இணைந்ததும் பிணைந்ததுமென
இருந்தது எம்மூர்களிலும் காதல்.
இன்று எல்லாம் தொலைத்து
இடருருவிக் கிடக்கிறது வனப்பு.
துக்கித்திருக்கிறது சோபிதம்.
‘வெஸ்ரேன் யூனியனில்’ வந்திறங்கும்
வெளிநாட்டு ஆதாரம்
இஷ்டத்துக்குப் பெருகுதெனினும்
கொள்ளிக்குப் பிள்ளைகளில்லையே.
காட்சிப்பெட்டி,
கைத்தொலைபேசி,
துவைக்கும்பொறி,
குளிருறை இயந்திரமென
புதிதாயெழும் மாளிகையெங்கும் நிறைந்துளது.
ஆயினுமென்ன
முதுகேறி விளையாடிய பிள்ளைகளில்லையே.
மூத்திரம்பெய்ய பேரர்களில்லையே.
வந்த பணம்குவிந்து,
வங்கி நிறைந்து,
வட்டி வளருதன்றி
கைவிஷேசம் வாங்க யாருமில்லையே.
முற்றத்து முருங்கை நிறைகாய்
சுமைதாங்காது கிளைமுறிய
மரமும் பாறிச் சரிகிறது
உருவிச்சப்ப ஒருவரில்லையே.
கிணற்றடிவாழை குலைமுற்றிக்கிடக்கிறது
ஒருவரில்லையே உரித்துத் தின்ன.
பழைய சாய்மனைகளுக்கெதற்கு புதியவீடு?
எல்லா அழகும் இல்லையென்றாக
எலியோடும் உத்தரத்தை வெறித்தபடி
எத்தனை நாளுக்கென்றுதான்
கைத்தடிகள் காவலிருப்பது?
“பிள்ளைகளை அனுப்பினது பேய்வேலை”
கூழோ கஞ்சியோ குடித்தபடி
ஒற்றைப்போர்வைக்குள்
எல்லோரும் உறங்கியிருக்கலாம்.
இருந்ததை எண்ணி மகிழ்ந்ததுவாய்
இழந்ததை எண்ணிக் குமைந்ததுவாய்
உழவை எதிர்பார்த்துக் கிடக்கிறது ஊர்.
வெளியார் வயலில்
வயலோர் வெளியில்.
முட்டும் இழுப்புடனும்
மூத்தோரே ஊர்முழுதும்.




